சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து, சமத்துவத்தையும், பகுத்தறிவு அணுகுமுறையையும் இம்மண்ணில் விதைத்தவர் தந்தை பெரியார். ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தொலைநோக்குப் பார்வையுடன் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் அவர். ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்தி, பாலின உரிமைக்காகவும், கல்விக்காகவும், கருத்துரிமைக்காகவும் போராடியவர் பெரியார்.
திராவிடர் இயக்கத்தின் தலைவராக சமூகநீதிக்காகப் போராடியதுடன், அனைத்து வகையான ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துக் கருத்துப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். பெண்ணுரிமைக்காகவும், பாலின சமத்துவத்திற்காகவும் நூறாண்டுகளுக்கும் முன்பே குரல் கொடுத்த முன்னோடி தந்தை பெரியார். பெண்கள் தங்கள் விடுதலைக்காகவும் காலங்காலமாக தொடர்ந்து வரும் பழமையான அடக்கு முறைகளை எதிர்த்தும் போராடி, அதிகாரப் பகிர்வின் மூலம் தங்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுவதில், முக்கியப் பங்காற்ற முன்வர வேண்டும் என்று கருதினார். அவரது முற்போக்கான சிந்தனைகள் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டுவரும் பெண் விடுதலை இயக்கங்களுக்கு இன்றும் ஊக்கமளித்து வருகின்றன.
பெரியார் உலகம் - சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு - இம்மூன்றையும் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். அவருடைய சிந்தனைகளைப் போற்றவும், உலகுக்கு அவற்றை உரத்தக் குரலில் எடுத்துரைக்கவும் உருவாகிவரும் உன்னதத் தலமே பெரியார் உலகம்.
தந்தை பெரியாரின் உயரிய சிந்தனைகளை அடையாளப்படுத்தும் வகையில் இதன் மய்யப் பகுதியில் 95 அடி உயரத்தில் பெரியாரின் பேருருவச் சிலை எழவிருக்கிறது. பார்வையாளர்களின் சிந்தனைக்கு விருந்தளித்து, அவர்களை ஈர்க்கும் வகையில் உலகில் வேறு எங்கும் காணமுடியாத தனித் தன்மையுடன் இது அமைக்கப்படுகிறது. இனிவரும் உலகின் புதிய தலைமுறையினரையும் பெரியார் உலகத்தின் கலை நுணுக்கம் கவர்ந்திழுக்கும். பண்பாட்டுச் சிறப்புகளும், கட்டிட எழிலும், சமூகச் செயல்பாடு களும் சங்கமிக்கும் இடமாக ‘பெரியார் உலகம்’ இருக்கும்.
பெரியார் உலகம் வெறும் ஒரு நினைவுச் சின்னமாக இருக்காது; காலாவதியான
பிற்போக்குச் சிந்தனைகளை தகர்த்தெறிய உதவிடும் கருவியாக இருக்கும்; சமத்துவம்,
சகோதரத்துவம் நிறைந்த சமுதாயம் உருவாக வழி வகுக்கும். மக்களுக்கு
விழிப்புணர்வு அளித்து ஊக்கப்படுத்தப் போகும் அறிவுத் தளமாக ‘பெரியார் உலகம்’
விளங்கிடும்.
வியக்கத்தக்க இந்த பெரியார் உலகத்தில் கட்டிட எழிற்கலையும், வரலாறும்,
செயற்பாடுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும். தனித்துவமிக்க
கலைக்கூடமாக இது மிளிரப் போகிறது. ஈடு இணையற்ற இந்த அழகிய உலகைப்
படைக்க எங்களோடு ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்
கொள்கிறோம். எங்கள் கரங்களைப் பலப்படுத்த வாருங்கள்!
இந்தக் கலைக்கூடத்தை உணர்வுபூர்வமாக ரசிக்க வாருங்கள். சமூக மாற்றம் விதைக்கப்பட்ட பெரியார் உலகின் ஒவ்வொரு பகுதியும் கலைத்தன்மையுடனும் அழகுணர்ச்சியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு ரசியுங்கள். உலகப் புகழ்பெற்ற ‘டிஸ்னிலேண்ட்’ போல் கண்ணைக் கவரப் போகும் ‘பெரியார் உலகம்’ மற்றொரு உலக அதிசயமாக போற்றப்படப் போவது உறுதி. இந்தப் பணி நிறைவடைய உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவை.
சமத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கப் போகும் பெரியார் உலகம்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, திருச்சியிலிருந்து 25 கி.மீ.
தொலைவில் உள்ள சிறுகனூரில் அமைந்துள்ள 27 ஏக்கர் நிலப்பரப்பில், உருவாகி
வருகிறது பெரியார் உலகம். இதன் முக்கியச் சிறப்பு, பெரியாரின் 95 அடி உயரச்
சிலை. சிலையைத் தாங்கி நிற்கும் பீடமே 60 அடி உயரமாக இருக்கும். இரண்டையும்
சேர்த்து தரையிலிருந்து மொத்த உயரம் 155 அடியாக இருக்கும்.
பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இந்த ஒரே
இடத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவருடைய முற்போக்குச்
சிந்தனையை அறிவியல் பார்வையில் பிரதிபலிக்கும் வகையில் அமையும். சமத்துவம்,
மனிதநேயம் போன்ற உயர்ந்த கொள்கைகளுக்காகப் பெரியார் எப்படிப் பாடுபட்டார்
என்பது தெரியவரும். பார்வையாளர்கள் மீது வியக்கத்தகு தாக்கத்தை பெரியார்
உலகம் ஏற்படுத்தப்போவது உறுதி.
‘பெரியார் உலகம்’ நிறைவடைய உங்களது நன்கொடைகள் பெரிதும் உதவும்.
சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கவல்ல இந்த புதிய, அரிய முயற்சிக்கு உங்களால்
இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்.
தந்தை பெரியாரின் பெருமைகளை உலகறியச் செய்ய எங்களுக்கு ஆதரவளியுங்கள்! வரலாறு படைத்திட உள்ளது ‘பெரியார் உலகம்’ உருவாக்கம். சுயமரியாதை உணர்வை உலகெங்கும் பரவிப் படரச் செய்யும் இந்த ஈடு இணையற்ற பெரியார் உலகம். நமது பன்முகத் தன்மைக்கே எடுத்துக்காட்டாக இருக்கப்போகும் ‘பெரியார் உலகம்’ உருவாக்கப் பணிக்கு தாராளமாகவே நன்கொடை வழங்கி உதவுங்கள்.
‘சிறுதுளி - பெருவெள்ளம்’ என்ற முதுமொழிக்கேற்ப சிறு தொகையாகவே உங்களது பங்களிப்பு இருந்தாலும் நாங்கள் மகிழ்வுடன் ஏற்போம். உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். உலகமே நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வண்ணம் கம்பீரமாகக் காட்சியளிக்கவுள்ள ‘பெரியார் உலகம்’ உங்களது பங்களிப்பில் உருவாகிட உள்ளது.
மேலும் படிக்கஇந்த உயரிய பணியில் முதன்மையான பல ஆலோசகர்கள் எங்களுக்கு ஆதரவளித்து ஆலோசனைகளும் வழங்கி வருகின்றனர். பல அன்பர்கள் எங்களோடு இணைந்து செயலாற்றி வருகின்றனர். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி - இவையாவும் பெருகிய புதிய சமுதாயம் உருவாக உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகும். உலகளாவிய சின்னமாக பெரியார் உலகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் வாருங்கள்! ‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று வலியுறுத்தி வந்த தந்தை பெரியாருக்குக் காலத்தில் நிலைத்து நிற்கும் ஒரு நினைவுச் சின்னமாக பெரியார் உலகம் விளங்க உங்கள் ஆதரவு இன்றியமையாதது.
மேலும் படிக்க