சமூகப் புரட்சியாளரும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கைக்கும், தலைசிறந்த கொள்கைகளுக்கும் மகுடம் சூட்டும் வகையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, திருச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வருகிறது ‘பெரியார் உலகம்’.
எதையும் பகுத்தறிந்து புரிந்துகொள்ளவும், புத்துலகம் படைப்பதற்கான ஊக்கம் பெறவும், சமூகச் செயல்பாட்டுக்குமான தாக்கத்தைப் பெரியார் உலகம் உருவாக்கும். இதன் மய்யப் பகுதியில் 60 அடி பீடத்தின் மீது 95 அடி உயர சிலையுடன் தரையிலிருந்து மொத்தம் 155 அடி உயரத்தில் பெரியாரின் பேருருவச் சிலை காட்சியளிக்கும். இது ஒரு கட்டுமான அதிசயம் மட்டும் அல்ல; சமத்துவத்திற்காகவும், சமூகநீதிக்காகவும் சளைக்காமல் போராடிய தந்தை பெரியாரின் பெருஞ்சிறப்புகளை உலக அரங்குகளில் எதிரொலிக்கும் ஒரு பேருருவ நினைவுச் சின்னமாகவும் திகழும்.
காண்போரைக் கவர்ந்திழுக்கும் கருத்துக் கருவூலமாகவும், பெரியாரைப் பற்றிய புரிதலை முழுமையாக அளிக்க கலைத்தன்மையுடன் எழுப்பப்பட்ட கலைக் களஞ்சியமாகவும் இக் காட்சிக் கூடம் இருக்கும். கலை நிகழ்ச்சிகளும், சமூக நிகழ்வுகளும் நடக்கும் ஒரு எழிலார்ந்த திறந்தவெளிக் கலையரங்கமும் இத்துடன் அமையவுள்ளது.
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் தற்காலக் கலைப் படைப்புகள் உங்கள் சிந்தனையைத் தூண்டும். ஜஸ்டிஸ் பார்க் என்று பெயரிடப்பட்டுள்ள நீதிப் பூங்காவும், நன்கொடை அளித்து உதவிய அன்பர்களின் பெயர்கள் அலங்கரிக்கும் சுவர்களும் நன்றியுணர்வின் அடையாளமாகும். பெரியார் பேருருவச் சிலையை அடைவதற்கான பாதையில் தென்படும் அழகிய நீருற்று உங்கள் உள்ளத்தைக் குதூகலிக்கச் செய்யும். நடைபயிலும் இடமெல்லாம் நற்சிந்தனைகள் உங்கள் அறிவுக்கு விருந்தாகும்.
உலகோர் கண்டு மகிழும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், இனி வரும் தலைமுறைகளையும் தந்தை பெரியாரின் கொள்கைகளை நோக்கி ஈர்க்கும் ஆற்றல்தளமாகவும் பெரியார் உலகம் விளங்கும்.
பெரியார் உலகத்திற்குள் அடியெடுத்து வையுங்கள்; எங்களுடன் இணைந்து செயல்படுங்கள்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், அறிவுச் செல்வத்தையும் உலகத்தின் கவனம் ஈர்க்கும் வகையில் கொண்டு செல்ல உருவாகவிருக்கும் பெரியார் உலகத்தின் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைத்தார். மறக்க முடியாத, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் அது!